சுண்டக்காய் கதை
===================
(As narrated by my wife for kids)
ஒரு ஊர்ல ஒரு
சுண்டக்கா இருந்துச்சாம். அத ஒரு அம்மா சமையலுக்காக வெட்ட போனாங்களாம். அந்த சுண்டக்கா, "என்னை வெட்டதீங்க! ப்ளீஸ்" என்றதாம். உடனே அம்மாவும் பாவப் பட்டு அந்த சுண்டக்காய சுண்டி விட்டாங்களாம். சுண்டக்கா உருண்டு உருண்டு போய் ஒரு மூலைல நின்னுச்சாம். அப்படியே ஒக்காந்து கால் மேல கால் போட்டுகிட்டு பாட்டு பாடிச்சாம்.
அடுத்த நாள் காலைல அந்த அம்மா எழுந்திருக்கும் போது வீட்ல கெட்டி இருந்த மாட்டை காணோமாம். அம்மா மாட்டை காணோம்னு அழுதாங்களாம். அத பார்த்த சுண்டக்கா, "அழாதீங்க மா, நான் போய் உங்க மாட்டை கண்டு பிடிக்குரேன்" என்றதாம். மேலும், "எனக்கு ஒரு மூட்டை பொரிகடலை வேண்டும்" என்றதாம். அம்மாவும் சரி என்றார்களாம்.
சுண்டக்கா மாட்டை திருடிய திருடர்களை பிடிக்க புறப்பட்டதாம். ஒரு தீப்பெட்டியில் கயிறு கட்டி அதில் இரண்டு கட்டெறும்பு பூட்டி ரதம் போல் உருவாக்கியாதாம். தீப்பெட்டியில் ஏறிக்கொண்டு கட்டெறும்பு இழுக்க திருடர்களை நோக்கி புறப்பட்டதாம்.
வழியில் ஒரு தேள், சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
தேள், "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.
பிறகு, வழியில் ஒரு பாம்பு, சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
பாம்பு, "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.
பிறகு, வழியில் ஒரு கழுதை, சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
கழுதை, "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.
பிறகு, வழியில் ஒரு யானை, சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
யானை, "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.
பிறகு, வழியில் ஒரு சேவல், சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
சேவல், "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்..
இவ்வாறாக சுண்டக்கா, தேள், பாம்பு, கழுதை, யானை, சேவல் அனைவரும் திருடன்னின் வீட்டை அடைந்தார்கள். சுண்டக்கா தேளை தீபெட்டியில் போட்டதாம். பாம்பை வீட்டின் அடுப்பில் போட்டதாம். கழுதையை வீட்டின் பின் வாசலில் வைத்ததாம். யானையை வீட்டின் முன் வாசலில் வைத்ததாம். சேவலை வீட்டின் கூரையில் வைத்ததாம். பிறகு சுண்டக்கா ஒளிந்து கொண்டதாம்.
அடுத்த நாள் காலையில் திருடன் ஒருவன் காபி போடுவதற்காக தீப்பெட்டியை திறந்தானாம். தீப்பெட்டியில் இருந்த தேள் அவனை கொட்டியதாம். அய்யோ என்று அலறினானாம். உடனே மற்றொரு திருடன் ஏன்டா கத்துற நான் காபி போடுறேன் பாரு என்று கூறி அடுப்பை திறந்தானாம். அடுப்பில் இருந்த பாம்பு அவனை கொத்தியதாம். இவனும் அய்யோ என்று அலறினானாம். இருவரும் அலறிக் கொண்டு வீட்டின் வெளியே வந்தார்களாம். அங்கிருந்த யானை அவர்களை தும்பிக்கையால் அடித்ததாம். இருவரும் மேலும் அலறிக் கொண்டு வீட்டின் பின் புறம் வெளியே சென்றார்களாம். அங்கிருந்த கழுதை அவர்களை காலால் எட்டி உதைத்ததாம். வேறு வழி இல்லாமல் அவர்கள் வீட்டின் கூரை மேல் ஏறி தப்ப முயன்றார்களாம். அங்கிருந்த சேவல் அவர்களின் கண்களை கொத்தியதாம். உடனே, திருடர்கள் மேல் இருந்து கீழே விழுந்தார்கலாம். சுண்டக்கா ஓடி வந்து திருடர்களை கையிற்றால் கட்டியதாம்.
திருடர்கள் பயந்து போய் மாடு இருக்கும் இடத்தை சுண்டைக்காயிடம் சொன்னார்களாம். சுண்டக்காய் மாட்டை ஓட்டிக் கொண்டு அதன் நண்பர்களுடன் வீடு திரும்பியதாம். அம்மா அவரது மாட்டை பார்த்து மகிழ்ச்சியுடன் இருந்தார்களாம். சுண்டக்காய் அம்மாவிடம் கேட்ட ஒரு மூட்டை பொரிகடலையை சுண்டகாயிடம் கொடுத்தார்களாம். சுண்டக்காய் பொரிகடலையை தனது நண்பர்களுக்கு எல்லாம் கொடுத்ததாம். அனைவரும் சந்தோசமாக வீடு திரும்பினார்களாம்.
அம்மா சுண்டக்காவுக்காக ஒரு சின்ன வீடு செய்து அதில் சோபா போட்டு அதற்க்கு தேவையான சாமான்களை எல்லாம் வைத்தார்களாம். அந்த வீட்டின் சோபாவில் சுண்டக்காவை உட்கார வைத்தார்களாம். சுண்டக்காய் மிகவும் சந்தோசமாக இருந்ததாம்.